Home > Elangakurichy > Elangakurichy on Kumudam Article

Elangakurichy on Kumudam Article

சவூதி, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா என வீட்டிற்கு ஒருவராவது வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிறப்பு இளங்காக்குறிச்சி கிராமத்திற்கு உண்டு. அதைவிட இன்னொரு சிறப்பு தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் கிராமம் இது என்பதுதான். திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்திருக்கும் பச்சைப்பசேல் மலை அடிவார கிராமம் என்பது கூடுதல் சிறப்பு.


ஒரு காலத்தில் புகையிலை விற்பனைதான் இவர்களின் தொழிலாக இருந்திருக்கிறது. இன்று விவசாயம், செங்கல் சூளை, சுண்ணாம்புக் கால்வாய், மிட்டாய் கம்பெனி, காண்ட்ராக்ட், வெளிநாட்டு வேலை என்று இளங்காக்குறிச்சிக்கு முகங்கள் பல. கூலி வேலையில் தொடங்கி டாக்டர், இன்ஜினீயர் வரை பல்வேறு விதமான விருப்ப வேலைகளை உள்ளூரிலேயே பார்க்கின்ற ஆண்களையும் காண முடிகிறது.பெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. அதே சமயம், கணவரது வருமானத்தை மட்டும் சார்ந்தும் இருப்பதில்லை.
‘‘எங்களால் இயன்ற தையல், திருப்பூரிலிருந்து வரவழைக்கப்படும் பனியன் துணியிலிருந்து நூலெடுத்தல், ஆடு கோழி வளர்த்தல் என பல்வேறு விதமான வேலைகளையும் நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம்” என்கிறார் சையது மீரா ஜானு.

மேலும், ‘‘எங்க ஊர்ல பெண்களோட கர்ப்ப காலம் மட்டும்தான் ரொம்பவே சிரமமான ஒண்ணு. துணை சுகாதார நிலையம்தான் இருக்கு. அதிலும் மருத்துவர்களே இல்லாததால் மருத்துவமனையை பத்திச்  சொல்ல வேண்டியதே இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவதொரு ஆத்திர அவசரம்னா வையம்பட்டிக்குதான் தூக்கிட்டு ஓட வேண்டியிருக்கு” என்கிறார்.

‘‘புகையிலைத் தொழில் நசிஞ்சு போன பிறகு மிட்டாய் கம்பெனிகள் தான் எங்களுடைய வாழ்வாதாரமா இருக்கு. கடலைமிட்டாய், மைசூர்பாகு, தேன்மிட்டாய்னு ஊரைச் சுத்தி நிறைய மிட்டாய் கம்பெனிகள் இருக்கு” என பரவசப்படுகிறார் அப்துல் மாலிக்.

சையது பீவி என்கிற எண்பது வயது மூதாட்டியோ, ‘‘பெண்கள் ஐந்து வேளையும் தொழுவது என்பது எங்களிடையே காலங்காலமாக உள்ள பழக்கம். பெரும்பான்மையான பெண்கள் சுயதொழில்களை உருவாக்கிக் கொள்வதால் வீட்டிற்கு வெளியே பார்ப்பது என்பது மிகவும் அரிது. இதனால் தெருக்களும் எப்போதும்  வெறிச்சோடித்தான் இருக்கும்” என்றபடி தொழுகையில் ஈடுபடுகிறார்.

சாலிஹா பீவிக்கு வயது நூற்றுப் பத்து! மகன், மகள், பேரப்பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளென இவர் வீட்டில் மட்டும் மொத்தம் எண்பது பேர். ஆனால், மூதாட்டியோ இந்த வயதிலும் சோர்ந்து விடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். பனியன் துணியிலிருந்து நூல் பிரிக்கிறார். நுட்பமான வேலையை நுணுக்கமாகச் செய்கிறார்.

‘‘இளங்காக்குறிச்சியில் மதப் பிரச்னை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை”யென தீர்க்கமான பெருமிதத்தோடு தொடங்குகிறார் முகமது யாகூப்.

‘‘சுத்துப்பட்டுல இருக்கிற எல்லா ஊர்க்காரங்களோடும் ரொம்பவே இணக்கமா இருக்கிறோம். எல்லாரும் ஒரே தாய்ப் புள்ளையாதான் பழகுகிறோம். பங்காளி, மாப்ளைன்னு முறை வச்சுக் கூப்பிடுறோம். அவங்க வீட்டு விசேஷத்து நாங்க போறதும் எங்க வீட்டு விசேஷத்துக்கு அவங்க குடும்பத்தோட வர்றதும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகளைப் போலவே தீபாவளி, கிறிஸ்துமஸ்ஸையும் வாழ்த்துச் சொல்லி பகிர்ந்துக்கிறதும் காலங்காலமாக நடந்துட்டு இருக்கு.

காய்கறிச் சந்தைக்குப் போறதிலிருந்து தானியக்கொள்முதல் வரை எல்லா ஊர்க்காரங்களோட வெறும் வர்த்தக உறவு மட்டும் வச்சுக்கலை. ரொம்பவே அன்னியோன்யமாக ஒரு குடும்பமாகவே பழகுறதால மதச் சண்டைங்கிற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்.

நல்ல விசயம்தானே!.

– இரா. கார்த்திகேயன், படங்கள் : சுதாகர்.

 

Categories: Elangakurichy
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: